Skip to main content

ஓட்டம் பிடிக்கும் அமர் பிரசாத் ரெட்டி; 3 தனிப்படைகள் விரைவு

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
3 individual troops quickly for caught Amar Prasad Reddy

சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தபோது சித்ரா நகரிலிருந்து ஆட்களை அழைத்து வருவது சம்பந்தமாக ஆண்டாளுக்கும், பா.ஜ.க மகளிர் அணி நிவேதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த 21 ஆம் தேதி இரவு 8 மணி போல் பா.ஜ.க விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியைச் சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர்  ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும், அங்கிருந்த ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி தேவி ஆகியோரிடம் கொலை மிரட்டல் விடுத்து அவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். 

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தேவி மற்றும் ஆண்டாளை, அவர்களது உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று அனுமதித்தனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அவர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், அமர் பிரசாத் ரெட்டி, அவரது ஓட்டுநர் ஸ்ரீதர், பா.ஜ.க நிர்வாகிகள் நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் மீது கோட்டூர்புரம் போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி காயப்படுத்துதல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியின் ஓட்டுநர் ஸ்ரீதரை கைது செய்தனர்.

இதனையடுத்து, பா.ஜ.க பெண் நிர்வாகியைத் தாக்குதல் நடத்திய வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவாகி இருக்கிறார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, 2 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாகியிருக்கிற அமர் பிரசாத் ரெட்டியை தேடி வந்தது. ஆந்திரா மாநிலத்தில் பதுங்கியிருந்ததாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் அவரை அங்கு சென்று தேடி வந்தனர். இந்த நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு அமர் பிரசாத் ரெட்டி மனுதாக்கல் செய்துள்ளார். மேலும், அவரை பிடிக்க குஜராத், டெல்லி, மும்பை ஆகிய மாநிலங்களுக்கு 3 தனிப்படைகள் அமைத்து தேட காவல்துறை முடிவெடுத்துள்ளது.

சார்ந்த செய்திகள்