
சேலம் 5 சாலை, அழகாபுரம் பகுதிகளில் மசாஜ் மையங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக சேலம் மாநகரக் காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவருடைய உத்தரவின்பேரில், காவல்துறை உதவி ஆணையர் நாகராஜன், பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் கந்தவேல் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள மசாஜ் மையங்களில் திடீர் சோதனை நடத்தினர். அங்கம்மாள் காலனியில் விதிகளை மீறி ஒரு மசாஜ் மையம் இயங்கிவருவதும் தெரியவந்தது. அங்கு சோதனை நடத்தினர். அந்த மையத்தில் 3 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்துவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பெண்களைப் பாலியல் தொழிலுக்கு அழைத்துவந்த புரோக்கரான விஜயலட்சுமி (34) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களையும் மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சேலத்தில் விதிகளை மீறி மசாஜ் மையங்களை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.