
அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் உடனடியாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டும் என உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உடனடியாகக் குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டாம்.மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி பகுதியில் உள்ள கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 15 நாட்களுக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டகுடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டும் என்ற ஒரு நோட்டீஸ், அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பகுதியில் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்கு கட்டப்படும் குடியிருப்புப் பகுதிகளில் நடைபெறும் பணிகளைச் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும், 'ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 3 சென்ட் நிலமும்,வீடு கட்டிக் கொள்வதற்கான நிதியும் வழங்கப்படும். மேலும் குடியிருப்புகளைக் காலி செய்ய அவர்களுக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும்’ என்றும் தெரிவித்தனர்.
Follow Us