Skip to main content

ஓய்வு பெற்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 3 சென்ட் நிலம்; அமைச்சருடன் நேரில் ஆய்வு செய்த ஆ.ராசா எம்.பி.

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

 3 cent land for retired tea plantation workers; A. Raza to inspect in person with the Minister

 

அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் உடனடியாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டும் என உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உடனடியாகக் குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டாம். மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

 

நீலகிரி பகுதியில் உள்ள கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 15 நாட்களுக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டும் என்ற ஒரு நோட்டீஸ், அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டப்படும் குடியிருப்புப் பகுதிகளில் நடைபெறும் பணிகளைச் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும், 'ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 3 சென்ட் நிலமும், வீடு கட்டிக் கொள்வதற்கான நிதியும் வழங்கப்படும். மேலும் குடியிருப்புகளைக் காலி செய்ய அவர்களுக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும்’ என்றும் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.