tt

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வாணியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகன் துளசிதரன். இவருக்கு இப்பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்தப் பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்ஃபோன் டவர் அமைப்பதற்கான விளம்பரத்தைப் பார்த்த துளசிதரன், அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்.

Advertisment

அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் அவரிடம் செல்ஃபோனில் பேசிவிட்டு நேரடியாக சென்னையிலிருந்து வந்துள்ளனர். அவர்கள் துளசிதரனின் இடத்தை பார்த்து ஆய்வு செய்து, நிலத்தின் பத்திரம் உட்பட பல ஆவணங்களைக் கேட்டு வாங்கிக் கொண்டனர். மேலும் அந்த இடத்தில் செல்ஃபோன் டவர் அமைக்க வேண்டுமானால் அதற்காக டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என துளசிதரனிடம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றனர்.

Advertisment

அதன் பிறகு அப்பகுதியில் செல்ஃபோன் டவர் அமைப்பதற்கான பணிகள் நடைபெறவில்லை. மேலும் அவர்களது செல்ஃபோனுக்கு பலமுறை துளசிதரன் முயன்றும் அவர்கள் செல்ஃபோன் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த துளசிதரன், திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

அவர்கள் விசாரணையில், சென்னை வண்ணாரப்பேட்டைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ரோஹித் கரண், திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயன் மகன் பார்த்தசாரதி, ஆனந்தன் என்பவரின் மகன் அரவிந்தசாமி ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து மோசடி செய்த ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.