மாதிரிப்படம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மதுராபுரி வேங்கைப்பட்டி கிராமத்தைச் சார்ந்த 7 வயது சிறுவன் அப்ரின் என்பவர் 2ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்த சூழ்நிலையில் வழக்கமாக பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படுவார். இந்நிலையில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் சிறுவன் இன்று (29.06.2025) பள்ளி வாகனம் வராமல் காரில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை பள்ளியில் இருந்து சிறுவனின் தந்தை பாலமுருகனைத் தொடர்பு கொண்டு உங்கள் பையன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறான் எனக் கூறியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த பாலமுருகன் அவர் உடனே சிங்கம்புனரி அரசு தாலுகா மருத்துவமனைக்குச் சென்று மகனைப் பார்த்துள்ளார். அப்போது அப்ரினின் வாயிலும் காதிலும் ரத்தம் கசிந்த நிலையில் உயிரிழந்த நிலையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதே சமயம் பள்ளி நிர்வாகத்தினர் யாரும் அரசு மருத்துவமனையில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட முயற்சித்தபோது அனைவரது தொலைப்பேசி எண்களும் ஸ்விட்ச் செய்யப்பட்டுள்ளதாகப் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக எந்த விவரங்களும் பள்ளியிலிருந்து சிறுவனின் பெற்றோருக்குக் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சின்னமலையில் 4 முனை சந்திப்பில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். தனியார்ப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்த மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவமாகத் தஞ்சாவூரில் தனியார்ப் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை செய்ததாகப் புகார் எழுந்திருந்த நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பள்ளி மாணவனைத் தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.