
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக, ஆளுநரின் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட 25 பெண்கள் உள்பட 285 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தை அடுத்த கருப்பூரில், பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலையில் நேரடியாக படித்த மற்றும் இதனுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் படித்த 62 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா பல்கலை கலையரங்கத்தில் ஜூன் 28 ஆம் தேதி நடந்தது. இதையொட்டி, பல்கலை வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்தார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜக பிரதிநிதி போல சனாதனக் கொள்கைகளை உயர்த்தியும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, ஆளுநரின் பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் நாளன்று, ஆளுநரின் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் சேலம் அரசு பொறியியல் கல்லூரி அருகே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. ஆனாலும் ஜூன் 28 ஆம் தேதி பகல் 11.45 மணியளவில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி எதிரில், ஆளுநரை கண்டித்து, காவல்துறை கட்டுப்பாட்டையும் மீறி, ஆளுநர் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் திவிக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மா.செ. மோகன், துணை செயலாளர்கள் ராமன், கந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மா.செ., சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடபதி, ராமமூர்த்தி, விசிக நிர்வாகிகள் ஜெயசந்திரன், வசந்த், காஜாமைதீன் மற்றும் திவிக., மதிமுக, தவாக., ஐயுஎம்எல்., ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிடம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது, 'ஆர்எஸ்எஸ் ஆளுநரே வெளியேறு' என முழக்கமிட்டனர். இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஆளுநரின் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டியக்கத்தைச் சேர்ந்த 25 பெண்கள் உள்பட 285 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.