தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 2011ஆம் ஆண்டு 1095 நேரடி உதவி ஆய்வாளர்கள் (ஆண்- பெண்) பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்கள் 2011ஆம் ஆண்டில் பயிற்சி முடித்து தமிழ்நாட்டில் வெவ்வேறு மாவட்டங்களில் பணியில் சேர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த ஆட்சியில் கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் வயது 60 என உயர்த்தியதாலும் காவல் துறையில் நிர்வாக குறைபாட்டாலும் பதவி உயர்வில் பல சிக்கல்கள் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. 

இதனை கவனத்தில் கொண்ட அரசும், காவல் துறை நிர்வாகமும் காவல் உதவி ஆய்வாளர் (SI) நிலையில் உள்ள 280 காவல் நிலையங்களை காவல் ஆய்வாளர் (Inspector) நிலைக்கு மாற்ற முடிவுச் செய்து  பல கட்ட முயற்சிக்கு பின்பு கடந்த, 29/04/2025ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் நிகழ்வின் போது சட்டப்பேரவை விதி எண். 110ன் கீழ் 27ஆவது அறிவிப்பாக "சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக பராமரிக்கவும், திறம்பட செயல்படவும் அன்றாட அவசர நிலைகளை கையாளவும் பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் 280 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்கள், ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக மாற்றப்படும்.

இதன் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் குற்ற வழக்குகளை விசாரிக்கவும் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் சட்டம் ஒழுங்கு சாதி வகுப்புவாத பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும்" என அறிவிப்பு வெளியிட்டார்கள்.அன்று இந்த அறிவிப்புடன் காவலர்கள் பதவி உயர்வு, மகளிர் காவலர்கள் திருமணத்திற்கு பணம் வழங்குவது போன்ற பல அறிவிப்புகளை முதலமைச்சர் செய்தார். இதில் காவல் ஆய்வாளர் பணியிடம் உருவாக்கும் அரசாணையை தவிர மற்றவற்றுக்கான அரசாணைகள் உடனடியாக வெளியிடப்பட்டு அவை செயல்பாட்டிற்கும் வந்துவிட்டது. ஆனால் 280 காவல் ஆய்வாளர் பணியிடம் உருவாக்கம் செய்யும் அரசாணை மட்டும்,  தமிழக முதல்வர் அறிவித்து இரண்டு மாதங்களாகியும் காவல்துறை தலைமை அலுவலக நாற்காலியில் கேப்பாரற்று தூங்கி கொண்டுள்ளது.

இதனை குறிப்பிட்டு பலரும் மனு அனுப்பியும் கடிதம் வந்ததற்கான ஒப்புதல் கடிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. இதனை நம்பி பதவி உயர்வு வந்து விடும் என்று நம்பிக்கையாக இருந்த சீனியர் எஸ்.ஐகள் பலரும் அரசாணை வராத்தால் சேர்வடைந்து மனம் நொந்து மன உளைச்சலில் தூக்கத்தை இழந்து தவித்து வருகிறார்கள். பதவி உயர்வு வரும் சமயத்தில் ஏதாவது தண்டனை வழங்கப்பட்டால் பதவி உயர்வு வழங்கப்படாது என்பது விதி. அரசாணை வழங்க உள்துறை செயலகமும், காவல் துறை உயரதிகாரிகளும்  தயாராக இருந்த போதும் காவல் துறை  தலைமை அலுவலக பணியாளர்களின் மெத்தனத்தால் இது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் நமக்கு ஏன் வம்பு; தண்டனை வந்து விட்டால் என்ன செய்வது என்று கிடைக்கும் விடுப்பை எடுத்து கொண்டு சென்று விட்டார்கள்.

Advertisment

இதனால் காவல் நிலையங்களில் அன்றாட பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர்கள் இல்லாத நிலை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்க தீர்வு கிடைக்குமா? என ஏக்கத்தில் 500 நேரடி காவல்  உதவி ஆய்வாளர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். இந்த பிரச்சனையை கவனத்தில்கொண்டு  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையில் நாளை (30/06/2025) ஆம் தேதி நடைபெறும் சட்டம் ஒழுங்கு கலந்தாய்வு கூட்டத்தில் இதுக்குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பவேண்டும். 280 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் உடனே உருவாக்காமல் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பவேண்டும் என காவல்துறை கீழ்நிலை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.