Skip to main content

28 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கப்  போகிறார்களா?

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், இந்த டெட் எனும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை தடுப்பதற்கு  நடக்க உள்ள டெட் தேர்வு வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசின் ‘இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம்’, 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறுகிற மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். ஏற்கெனவே ஆசிரியராக பணியாற்றுபவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

 

teachers



இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்ததால், தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற ஆசிரியர்களுக்கு 2016-ம் ஆண்டு வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த அவகாசம் 2019 மார்ச் 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிந்துவிட்ட நிலையில் , தனியார் மற்றும் அரசு உதவி பள்ளிகளில் இன்னும் 28 ஆயிரம் ஆசிரியர்கள் (டெட்) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருக்கின்றனர். இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்படத்தக்கது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில், ‘தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மார்ச் மாதத்துடன் கால அவகாசம் முடிந்துவிட்டது. இதனால் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்கலாம்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

teachers



இதையடுத்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இதனால், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் பணியில் நீடிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இதுதவிர, அரசுப் பள்ளிகளில் சுமார் 500 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை. கடைசியாக 2017-ல் டெட் தேர்வு நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் டெட் அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க, ஆசிரியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பது சரியல்ல. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதால் அவர்களது குடும்பங்கள் மன உளைச்சலில் தவிக்கின்றன. எனவே, டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் இத்துறை சம்மந்தப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற, ஆசிரியர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.எனவே ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதியும் கருணை அடிப்படையில் விரைவில் நடக்கவுள்ள டெட் தேர்வு வரை அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.