
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தங்க பெருமாள் என்பவரின் மகன்கள் பெரியசாமி, ஆனந்தராஜ். இவர்கள் இருவரும் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் தங்களது பூர்வீக ஊரான விளாத்திகுளம் புதூர் கிராமத்திற்குப் உறவினர்களை சந்திப்பதற்காக ஒரு டெம்போ டிராவலரில் புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகிலுள்ள பாதூர் என்ற இடத்தில், சாலையோரம் இருந்த ஹோட்டலில் டீ குடிப்பதற்காக வேனை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கி டீ குடிக்கசென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது வேன் மீது வைத்து கட்டப்பட்டிருந்த இரண்டு சூட்கேஸ் காணாமல் போயிருந்தது. அதில் ஒரு சூட்கேசில் 264 பவுன் நகைகள் இருந்தது. அது கொள்ளையடிக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெரியசாமி, ஆனந்தராஜ் இருவரும் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து 5 தனிப்படை அமைக்கப்பட்டு சூட்கேஸ் கொள்ளையர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அதேசமயத்தில், போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளை போன டெம்போ ட்ராவலர் வேனின் பின்னால் ஒரு மினி வேனும் முன்னால் ஒரு காரும் சென்றது தெரியவந்தது. அந்த வண்டி எண்களைக் கொண்டு விசாரணை செய்ததில் அந்த வாகனங்கள் இரண்டும் மதுரையைச் சேர்ந்த வாகனம் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மதுரை போலீசாருடன் தொடர்பு கொண்டு விசாரணை செய்த திருநாவலூர் போலீசார், அந்தக் கார் மற்றும் மினி டெம்போ தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கொள்ளைக் கூட்ட தலைவனுக்குச் சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் மதுரைக்குச் சென்று கொள்ளைக் கும்பலின் தலைவனைச் சுற்றிவளைத்த போது, அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார். ஆனால், இந்தக் கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருவர் சிக்கினர்.
மேலும், இந்தக் கொள்ளைக் கும்பலுக்கு உதவியாக இருந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் ஓடும் வாகனங்களில் சாகசமாக கொள்ளையடிக்கும் கைதேர்ந்த கும்பல் அவ்வப்போது தங்கள் கைவரிசையைக் காட்டிவருகிறது. தற்போது அந்தக் கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிடிபட்ட இருவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 64 பவுன், ஒரு கார், மினி டெம்போ ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்தக் கொள்ளையில் தொடர்புடைய கொள்ளை கும்பல் தலைவன் உட்பட 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிடிபட்ட இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையிலிருந்து வரும் வழியில் விக்கிரவாண்டியில் சாலையோரம் டீக்கடையில் வேனை நிறுத்திவிட்டு டீ குடிக்க டெம்போ டிராவலர் வாகனத்தில் இருந்தவர்கள் சென்றனர். பிறகு அங்கிருந்து அவர்கள் புறப்பட்டபோது வேன் பின்னால் ஒரு மினி வேனில் கண்காணித்தபடி பின்தொடர்ந்து வந்தோம். வேன் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது எங்களில் ஒருவர் வேன் மீது சாகசமாக ஏறி அங்கிருந்து இரண்டு பெட்டிகளைத் தூக்கி சாலையோரம் போட்டுவிட்டு, வண்டியிலிருந்து இறங்கினோம். பின், பின்தொடர்ந்து வந்த வண்டியில் அந்த பெட்டிகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றோம் என்று தெரிவித்துள்ளனர்.