/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a5428_2.jpg)
அண்மையாகவே தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் மிக அண்மையில் தமிழக மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு பல்வேறு வகைகளில் கடிதம் எழுதி இருந்தார். அண்மையில் தமிழக முதல்வரின் கடிதத்திற்கு பதில் கொடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதி இருந்த கடிதத்தில், '1974ம் வருடம் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இடையேயான ஒரு ஒப்பந்தத்தின் (கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைமுகமாக குறிப்பிட்டு) அடிப்படையில் மீனவர் பிரச்சனை ஆரம்பமானது. அன்றிலிருந்து எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்களோ அப்போதெல்லாம் மத்திய அரசின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மீனவர்களின் நலன் காப்பதில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகபட்ச முன்னுரிமை தருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது' இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ்கோடியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தற்போது 25 மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)