/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2516.jpg)
திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது திருநகர். இங்கு தலைமை தபால் நிலைய உதவி அதிகாரியாக மணிமாறன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மணிமாறன் வீட்டிலிருந்து அதிகளவில் புகை வெளியாகியுள்ளது. அதனைக் கண்ட அவர் வீட்டின் அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதற்குள் காவல்துறையினருக்கும் தகவல் தெரியவர, காவல்துறையினரும் அங்கு விரைந்தனர். மேலும், சம்பவம் குறித்து மணிமாறனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரும் அங்கு வந்தார்.
தீயை அணைத்தப்பிறகு மணிமாறன் மற்றும் அவரது குடும்பத்தார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு பீரோவில் வைத்திருந்த நகைகளை தேடி பார்த்தபோது, அதில் இருந்த நகைகள் காணாமல் போயிருந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு இருந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதனிடம் மணிமாறன் புகார் அளித்தார். அந்தப் புகாரை ஏற்ற ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மணிமாறனுக்கு சொந்தமான வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் 25 பவுன் நகையை கொள்ளையடித்து மட்டுமில்லாமல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காவல்துறையினருக்கு தெரியாமல் இருப்பதற்காக பீரோவில் இருந்த பத்திரங்கள், சான்றிதழ்கள், பட்டுப் புடவைகள், கணினி மற்றும் கைபேசி உள்ளிட்ட பொருட்களை இரண்டு படுக்கை அறைகளில் பரவலாக வைத்து கொளித்திவிட்டு (தீ வைத்து விட்டு) சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு 10 லட்ச ரூபாய் இருக்கலாமென மணிமாறன் தெரிவித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_654.jpg)
கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் விதமாக மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கைரேகை தடயவியல் நிபுணர் பிரேமா உள்ளிட்ட குழுவினரை வரவழைத்து தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என்றும் ஆய்வு செய்துவருகின்றனர்.
Follow Us