ADVERTISEMENT

“25% மறைமுக மின்சாரக் கட்டண உயர்வு பெரும் அநீதி” - ராமதாஸ்

01:09 PM Jun 24, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிக மின்சார பயன்பாடு இல்லாத நேரமான இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான 7 மணி நேரத்திற்கு 5 விழுக்காடு கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு கொண்டுவந்த மின்சார சட்டம் மற்றும் அதன் அடிப்படையிலான மின்சார (நுகர்வோர் உரிமை) விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சினோமோ, அவை அனைத்தும் நடைமுறைக்கு வரத் தொடங்கிவிட்டன. முதல்கட்டமாக, 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வணிகப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கும், 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கும் அதிக மின் பயன்பாட்டு நேரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது கடுமையான பொருளாதார தாக்குதலைத் தொடுக்கும் இந்த நடவடிக்கை பெரும் அநீதி ஆகும்.

தமிழ்நாட்டில் காலை மற்றும் மாலை வேளைகளில் 6 மணி முதல் 10 மணி வரையிலான 5 மணி நேரத்தை அதிக மின்பயன்பாட்டு நேரமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. மின்சார (நுகர்வோர் உரிமை) விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி இந்த நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு வழக்கமான கட்டணத்திலிருந்து 25% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல், அதிக மின்சார பயன்பாடு இல்லாத நேரமான இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான 7 மணி நேரத்திற்கு 5 விழுக்காடு கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் தான் அனைத்து மின்சாரக் கருவிகளும் பயன்படுத்தப்படும். அலுவலகத்திற்கு புறப்படுவது, அலுவலகம் விட்டு வீடு திரும்பிய பிறகு தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு கருவிகளை பயன்படுத்துவது உள்ளிட்டவை இந்த நேரத்தில் தான் நடைபெறும். அதிக மின்சார பயன்பாட்டு நேரத்தில் மின்சாரத்தின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகத் தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மத்திய அரசின் விதிகள் கூறுகின்றன. இது நடைமுறை சாத்தியமற்றது. அதிகபயன்பாட்டு நேரத்தில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு முன்பாக அலுவலகத்திற்கு ஆயத்தமாவதோ, இரவு 10 மணி மேல் பொழுதுபோக்குக் கருவிகளை பயன்படுத்துவதோ எப்படி சாத்தியமாகும்?

வீடுகளின் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 70%, காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலுமான 10 மணி நேரத்தில் தான் நடைபெறுகிறது. அதிக மின்சார பயன்பாடு இல்லாத நேரமான இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான 7 மணி நேரத்தில் 10% -&15% மின்சாரம் கூட பயன்படுத்தப்படுவதில்லை. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில் வழக்கமான மின்சாரக் கட்டணம் தான் வசூலிக்கப்படும். 10 விழுக்காடு மின்சாரப் பயன்பாட்டுக்கு 5% கட்டண சலுகை வழங்கிவிட்டு, 70% மின்சாரப் பயன்பாட்டுக்கு 25% கூடுதல் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இது மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 25% உயர்த்துவதாகவே பொருளாகும். நுகர்வோரை கசக்கிப் பிழியும் இந்த நடவடிக்கைக்கு மின்சார நுகர்வோர் உரிமை விதி என்று பெயரிட்டிருப்பது முரண்பாடு ஆகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அண்மைக்காலங்களில் செய்யப்பட்ட மின்சாரக் கட்டண உயர்விலிருந்து பொதுமக்களாலும், தொழில் துறையினராலும் மீண்டு வர முடியவில்லை. இத்தகைய சூழலில் 70% மின்சாரப் பயன்பாட்டுக்கு மறைமுக கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவது ஏழை மற்றும் நடுத்த மக்களுக்கு தாங்க முடியாத பொருளாதார சுமையை ஏற்படுத்தி விடும். தொழில்துறையினராலும் இதை தாக்குப் பிடிக்க முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அதிக மின் பயன்பாட்டு நேரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மக்களை பாதிக்கும் மின் விதிகள் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மத்திய அரசின் மின்சார விதிகள் திருத்தத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடாது; கூடுதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT