Skip to main content

பழனி முருகனுக்கு சொந்தமான 25 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

25 crore worth of land owned by Palani Murugan recovered!

 

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான சொத்துக்களை பக்தர்கள் தானமாக வழங்கி உள்ளனர். இச்சொத்துக்களில் பல ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், சொத்துக்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

 

இதன்படி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை கண்டறிவது, ஆக்கிரமிப்பு விபரங்களை கண்டறிவது, சொத்துக்களை மீட்பது தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பது போன்றவற்றுக்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

 

இதன்படி, பழனி கோயிலுக்கு பக்தர்கள் தானமாக வழங்கிய 60.42 ஏக்கர் புஞ்சை நிலம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, பெரியகுமாரபாளையம் கிராமத்தில் இருந்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த 6 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது தொடர்பாக பழனி கோயில் நிர்வாகம் சார்பில் தாராபுரம் சார்பு நீதிமன்றம், கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம், சென்னை ஐகோர்ட் மற்றும் டெல்லி உச்சநீதிமன்றம் வரை உரிமை கோரி வழக்கு தொடரப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளாக நடந்த சட்ட போராட்டத்தில் இந்நிலங்கள் பழனி கோயிலுக்கு சொந்தமானவை எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

 

25 crore worth of land owned by Palani Murugan recovered!

 

இதன் அடிப்படையில், வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலையில் 60.42 ஏக்கர் நிலம் நேற்று மீட்கப்பட்டது. திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி அணையர் அனிதா, பழனி சரக ஆய்வாளர் கண்ணன் ஆகியோரால் பழனி கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் இந்நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பழனி கோயில் துணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.25 கோடி என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

இதுசம்மந்தமாக பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் கேட்டபோது, “இதுபோல் பல இடங்களில் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அது சம்மந்தமாக கோர்ட்டில் வழக்கும் நிலுவையில் இருப்பதால் கூடிய விரைவில் அந்த இடங்கள் மீட்கப்படும் அதுபோல் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இருக்கிறது. அந்த கடைகளுக்கு வாடகையும் செலுத்தி வருகிறார்கள். அது இல்லாமல் கோயில் இடங்களை ஆக்கிரமித்து கடைகள் ஏதும் வைத்திருந்தாலும் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீங்க கோயிலுக்குள்ள தான் சண்டியர்; ஆனா வெளிய நாங்கதான்” - மிரட்டிய காவலர் 

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

police who threatened the Palani Devasthanam employee

 

உலக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடியது பழனி முருகன் கோவில். இந்த பிரம்மாண்ட கோவிலுக்கு, சாதாரண நாட்களிலேயே வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த பெருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.  அந்த வகையில், பழனி நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பிரபு. இவர்.. பழனி தாராபுரம் சாலையில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். 

 

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலர் பிரபு அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி.. அதன் ஆவணங்களை சரிபார்த்து வந்துள்ளார். மேலும், விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்திருந்தார். இதற்கிடையில், அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்தார்.  அப்போது, அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் என காவலர் பிரபு கேட்டுள்ளார். அதற்கு, அந்த வாகன ஒட்டி தான் பழனி கோவிலில் ஊழியராக உள்ளதாக கூறியுள்ளார். 

 

ஒருகணம், இதை கேட்டு விரக்தியடைந்த காவலர் பிரபு, "ஓ கோவில்ல வேலை செய்றியா? இந்த தேவஸ்தானம் போர்டுலாம் ஓவரா பண்ணிட்டு இருக்காங்க. ஒரு போலீஸ் கோவிலுக்குள்ள போக முடியல. யூனிபார்ம்ல போனா கூட ஐடி கார்டு கேக்குறாங்க" என கடிந்து கொட்டினார்.

 

அதைத்தொடர்ந்து, காவலர் பிரபு பேசும்போது, "அந்த கோயில்ல இருக்கான்ல ஒரு ஆணையாளர்.. அவன் ஐபிஎஸ் முடிச்சானா இல்ல ஐஏஎஸ் முடிச்சானா? ஏன் அவ்ளோ பண்றானுங்க" என அவர்களை ஒருமையிலும் தகாத வார்த்தையிலும் திட்டித் தீர்த்தார். அதுமட்டுமின்றி, "உங்க பவர் எல்லாம் கேட்டுக்குள்ள தான். நீங்க கோயிலுக்குள்ள தான் சண்டியர்.. ஆனா.. வெளிய நாங்க தான் சண்டியர்.. வெளிய சிக்கினா கண்டிப்பா விடமாட்டேன். நிச்சயமா கேஸ் போடுவேன்" என மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். 

 

அப்போது, இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த கோயில் ஊழியர், "காவலர் பிரபு பேசுவதை தனது செல்போனில் மறைத்து வைத்துக்கொண்டு முழுவதுமாக வீடியோ எடுத்துள்ளார். அதன்பிறகு, இந்த வீடீயோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.  இத்தகைய சூழலில், இந்த வீடியோ வைரலான நிலையில்.. அது கோயில் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதில் கோயில் ஆணையரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுக்கும் காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

தற்போது, கோயில் ஊழியரை தரக்குறைவாக பேசிய காவலரின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Next Story

ஆடி கிருத்திகை; பழனி கோயில் நிர்வாகம் எச்சரிக்கை

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Audi Concept Palani temple administration alert

 

இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காகப் பல்வேறு முன் ஏற்பாடுகள் பழனி கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை அன்று அர்ச்சனை செய்வதற்குத் தொலைப்பேசி வாயிலாகப் பதிவு செய்யலாம் என வாட்ஸ்அப் வழியே பரவும் பொய்யான தகவல்களை நம்பி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனப் பழனி கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “0444 - 2890021 என்ற எண்ணினை தொடர்பு கொண்டால் பழனி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர், நட்சத்திரம் கேட்பார் அதைச் சொன்னவுடன் ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாகத் தெரிவித்துப் பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" எனப் பொய்யான தகவல்கள் வாட்ஸ்அப் வழியாகப் பரப்பப்பட்டு வருவது இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்குத் தெரியவந்தது.

 

அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கியவர்கள் மீது காவல்துறை, சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இதுபோன்ற தொலைப்பேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.