24 Hour Emergency Pass-  High Court orders to Tamil Nadu government

எமர்ஜென்சி பாஸ்களை 24 மணிநேரமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணம், மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வெளியூர் செல்பவர்களுக்கு அவசர பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த அனுமதிச் சீட்டுகள் மின்னணு முறையில் வழங்கப்படுகிறது. அதற்கு இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, அனுமதிச் சீட்டுகள் தாமதமாக வழங்கப்படுகிறது.

Advertisment

மருத்துவம் மற்றும் இறப்புகளுக்காக வெளியூர் பயணிப்பவர்களுக்குத் தாமதமாக அனுமதிச் சீட்டு வழங்குவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், திருமணம் உள்ளிட்ட விழாக்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு நடத்தப்படுவதால், முன்கூட்டியே விண்ணப்பிக்க முடியும். ஆனால், திடீரென எதிர்பாராதவிதமாக ஏற்படும் மரணங்கள் மற்றும் உடல் நலக் குறைவுகளுக்கு அனுமதிச்சீட்டு கோரி விண்ணப்பிக்கும் போது தாமதமாக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகிறது. மின்னணு அனுமதிச் சீட்டுகள் வழங்கும் கட்டுப்பாட்டு அறைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுவதால், அவசரகாலபயணங்களுக்கு அனுமதிச் சீட்டு கோரி விண்ணப்பிக்க ஒரு நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால், மருத்துவம் மற்றும் மரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது ஒரு மணி நேரத்தில் முடிவெடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும். மருத்துவம் மற்றும் மரணங்களுக்கு 24 மணி நேரமும் அனுமதி சீட்டுகள் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பசத்யநாரயணா அமர்வு, 24 மணிநேரமும் பாஸ் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒருவர் பாஸ் பெற 2 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றால் எமர்ஜென்சி என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினர். வரும் திங்கட்கிழமை உரிய பதலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.