23 bikes recover from bike robberies vilupuram

Advertisment

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக டூவீலர் திருட்டுகள் அதிகரித்து வந்துள்ளது. திருடர்களிடம் வாகனங்களைப் பறி கொடுத்த வாகன உரிமையாளர்கள் ஏகப்பட்ட பேர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் கவனத்திற்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் டூவீலர் திருடர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், போலீஸார் நேற்றுக்காலை ஜெயபுரம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் பைக்கில் வந்த வாலிபரை மடக்கி போலீசார் விசாரித்தனர்.

அவர் முரண்பாடான பதில் கூறவே, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று முறையான விசாரணையை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஓட்டி வந்த பைக் திண்டிவனம் பகுதியில் திருடப்பட்டது என்பதும் அந்த வாகனத்தில் வந்தவர் திண்டிவனம் டி.வி. நகர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் ஒலக்கூர், ரோஷனை, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து டூவீலர் திருட்டில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. அப்படி திருடப்பட்ட பைக்குகளை செண்டூர் கிராமத்தைக்சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் மகன் சங்கர் என்பவர் மூலம் பல்வேறு இடங்களில் கனகராஜ் விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisment

இதையடுத்து சங்கர், கனகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அளித்த தகவலின்பேரில் அவர்கள் திருடி விற்ற 22 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருடி சென்ற வாகனங்களை துரிதமாக செயல்பட்டு விரைந்து பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார். ஒரே ஒரு நபர் கடந்த சில மாதங்களில் மட்டும் தொடர்ந்து டூவீலர் திருட்டில் ஈடுபட்டு 20க்கும் மேற்பட்ட டூவீலர்களை திருடி விற்ற சம்பவம் அதை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டுவந்து சேர்த்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.