
சேலத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 276 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களில் சேர 22 ஆயிரம் பேர் போட்டிப்போட்டு விண்ணப்பித்துள்ளதைக் கண்டு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வியப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 236 ரேஷன் கடை விற்பனையாளர்கள், 40 கட்டுநர்கள் என 276 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் நவ. 14ம் தேதி வரை பெறப்பட்டன.
இந்தப் பணியிடங்களில் சேர மொத்தம் 22 ஆயிரம் பேர் இணையம் மூலமாக விண்ணப்பித்து உள்ளனர். தகுதி வாய்ந்த பணிநாடுநர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அவர்களுக்கு வரும் டிசம்பர் மாதத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''வெறும் 276 காலியிடங்களுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உயர் பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட இந்த வேலைக்காக விண்ணப்பித்து உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட கூடுதலான கல்வித்தகுதி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு தகுதி உடையவராக கருதப்பட மாட்டார்கள். தகுதி வாய்ந்த பணிநாடுநர்களுக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அழைப்புக்கடிதம் அனுப்பும் பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும்'' என்றனர்.