Skip to main content

இங்கிலாந்திலிருந்து ஈரோடுவந்த மேலும் 6 பேருக்கு கரோனா பரிசோதனை..!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

22 people return from england to erode


சீனாவில் தொடங்கி உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் காற்றைப் போல் பரவிய கரோனா வைரஸ், அதன் தீவிரம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், மேலும் ஒரு அச்சுறுத்தலாக இங்கிலாந்து நாட்டில் அதிகரித்துவருகிறது. 

 

இதனால், உலகில் உள்ள பல நாடுகள் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்துச் சேவையை நிறுத்திவிட்டது. இந்திய நாடும் விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளது. இருப்பினும் சமீப காலங்களில் அந்நாட்டிலிருந்து திரும்பி, இந்தியா வந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களைத் தனிமைப்படுத்தி உடல் நிலையை ஆய்வு செய்து வருகிறார்கள் சுகாதாரத் துறையினர்.
 

தமிழகத்திலும் இந்தப் பணி தொடர்கிறது. அதில், இங்கிலாந்திலிருந்து ஈரோட்டுக்கு வந்த 16 பேர் கண்டறியப்பட்டு அவர்களைத் தனிமைப்படுத்திய சுகாதாரத் துறையினர் தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து ஈரோடுக்கு மேலும் 6 பேர் வந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களும், அவர்களின் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து ஈரோடு மாவட்டச் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறும்போது, “மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியபடி இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வருபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் அவரது குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்களுக்குத் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். 
 

cnc


அதன்படி நேற்று முன்தினம் 16 பேர் கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று மேலும் 6 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளனர். ஏற்கனவே 16 பேருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் 7 பேருக்கு மட்டும் வந்துள்ளது. அந்த 7 பேருக்கும் வைரஸ் தொற்று இல்லை என நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது. மீதி உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து முடிவுகள் வரும். அதேபோல், இப்போது மேலும் புதிதாகக் கண்டறியப்பட்ட 6 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.


இந்த பரிசோதனையில் அவர்களுக்குத் தொற்று இருந்தால் அந்த சேம்பில் பூனேவில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அது எந்த வகையான கரோனா எனக் கண்டறியப்படும். மாநில சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்படி ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத் துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் மக்கள் நலன் காக்க முழுமையாகப் பணியாற்றி வருகிறார்கள்" என்றார்.


இதுவரை ஈரோட்டுக்கு இங்கிலாந்துலிருந்து 22 பேர் வந்துள்ளனர். அனைவரும் இப்போது சுகாதாரத் துறை கண்காணிப்பில் உள்ளார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்