Skip to main content

தி.மு.க தேர்தல் அறிக்கை குழு கூட்டம் தொடங்கியது!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

2021 tn assembly election dmk party manifesto team discussion

 

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

 

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

இந்தக் குழு, 2021- ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தேர்தல் அறிக்கை; திமுக - காங்கிரஸ், இரட்டைக்குழல் துப்பாக்கிகள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK-Congress twin at Election report

தேர்தல் என்று வந்து விட்டாலே ஆளாளுக்கு கருத்து சொல்லும் கருத்து கந்தசாமிகள் முளைத்து விடுவார்கள். வாட்ஸ் அப் வாத்தியார்களுக்கும் ஒரே கொண்டாட்டம் தான்.  தங்களது சார்பாக பேச பேச்சாளர்களை தயார் செய்து கட்சிகள் களம் இறக்குவதும் வாடிக்கை. தலைவர்களின் பிரச்சாரங்கள், அறிக்கைகள், துண்டு பிரசுரங்கள், மேடை பேச்சுகள் என எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்புதான். அதனால்தான் தேர்தலை திருவிழாக்கள் என்று கூட சொல்வதுண்டு. கட்சிகளின் வாக்குறுதிகளை பறைசாற்றும் தேர்தல் அறிக்கைகளும் தற்போது மக்களின் பல்ஸ் ரேட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளன.

ஆரம்பத்தில் ஒரு சம்பிரதாயமாகத்தான் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால், 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க அறிவித்த தேர்தல் அறிக்கை அந்த சம்பிரதாயத்தைப் புரட்டி போட்டது. தி.மு.க தலைவர் கலைஞர் அறிவித்த அந்த தேர்தல் அறிக்கை மிகப்பெரிய பேசு பொருளானது. குறிப்பாக அனைத்து குடும்பங்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பு பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. தி.மு.க.வின் இந்த தேர்தல் அறிக்கையை ஒரு கதாநாயகன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வர்ணித்தார். தி.மு.கவின் தேர்தல் அறிக்கையின் பக்கம் மக்களின் கவனத்தை திருப்ப இது ஒரு காரணமாக அமைந்தது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வரலாற்றை மாற்றி எழுதியதோடு மட்டுமல்லாமல், அந்த தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியையும் தேடி தந்தது. மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் அனைத்து வீடுகளுக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன.  நாளடைவில் அது அமோக வரவேற்பு பெற்று, அதனை கலைஞர் டி.வி. என்றே மக்கள் அழைத்தனர். இந்த தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் அறிக்கைகள் முக்கிய பங்கு வகித்தன. மக்களை கவரும் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட அனைத்து கட்சிகளும் முக்கியத்துவம் கொடுத்தன. தேர்தல் அறிக்கைகள் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்து கொண்டு அரசியல் கட்சிகளும் அதில் இடம் பெறும் உறுதி மொழிகளை மிகவும் கவனத்துடன் கையாள ஆரம்பித்தன.

DMK-Congress twin at Election report

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இது தொடர்கிறது. 2006 ஆம் ஆண்டு புரட்சியை ஏற்படுத்தியதை போல் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தி.மு.க.வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை ஒரு கதாநாயகியாக இருக்கும் என்று கனிமொழியும் கருத்து தெரிவித்து இருந்தார். அதன்படியே, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு வியத்தகு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 64 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூக இயக்கங்கள், மக்கள் அமைப்புகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கை என்று புகழாரம் சூட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த தேர்தல் அறிக்கையில் பல அசாத்தியமான கலர்புல் வாக்குறுதிகளும், ஒன்றிய அரசால் மட்டுமே நிறைவேற்றக்கூடிய திட்டங்களும் இடம் பெற்று இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும், ரெயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் மீண்டும் உருவாக்கப்படும், அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும், பெட்ரோல் ரூபாய் 75 க்கும், டீசல் ரூபாய் 65 க்கும், சமையல் எரிவாயு ரூ. 500 க்கும் வழங்கப்படும் என தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது போதாது என்று தேசிய மீன்வளக் கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும், அனைத்து ஒன்றிய அரசுத் தேர்வுகளிலும் தமிழை விருப்ப மொழியாக ஏற்க வகை செய்யப்படும், கபடிப் போட்டியை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமூக நீதியின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும், ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 361 நீக்கப்படும் என்று நீண்டு கொண்டே போகின்றன தி.மு.க.வின் வாக்குறுதிகள்.  

மேலும், ஜி.எஸ்.டி வரி வசூல் முழுமையாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களுக்கான பங்களிப்பு போக மீதமுள்ள தொகை ஒன்றிய அரசுக்கு வழங்கப்படும், உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் கூறுகின்றன. இந்த வாக்குறுதிகள் 2021 சட்டமன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் மறு பிரதியே என்றும், இதன் மூலம் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க நிறைவேற்றவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இன்னும் ஒரு படி மேலே போய், ஏதோ ஸ்டாலின் பிரதமர் ஆகி விட்டது போல் எண்ணிக் கொண்டு தி.மு.க இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

DMK-Congress twin at Election report

இருப்பினும், இதற்கெல்லாம் சளைக்காத முதலமைச்சர் ஸ்டாலின், “மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சி தான் வரப்போகிறது. அதனால் தான் நம்பிக்கையுடன் இந்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம்” என்று விளக்கம் அளித்துள்ளார். இதற்கு அத்தாட்சி வழங்குவது போல் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் புருவங்களை உயர்த்தி வருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

பா.சிதம்பரம் தலைமையிலான குழு மக்களவைத் தேர்தலுக்காக 5 தலைப்புகளில், 25 வாக்குறுதிகள் அளிக்கும் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை போலவே, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், ஏழை மகளிருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிற துவங்கியுள்ளது. இது மட்டுமின்றி, மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும், புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும், நீட் மற்றும் க்யூட் தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம், விவசாய இடு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், பாஜக இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்படும், புதிய ஜிஎஸ்டி 2.0 இயற்றப்படும், அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்படாது, நீட் தேர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் போன்ற அதிரடி அறிவிப்புகள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

DMK-Congress twin at Election report

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் மாநில சுயாட்சி கொள்கைக்கு அச்சாரம் போடப்பட்டிருக்கிறது. அதாவது, கல்வி, பண்பாடு, நிதிப் பங்கீடு என பல அம்சங்களில் மாநில சுயாட்சி எனும் தி.மு.க.வின் கொள்கையை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் ஓர் அற்புதம் நிகழ்ந்திருப்பதாக நெட்டிசன்கள் அங்கலாய்க்கின்றனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்புகளால் காங்கிரஸ் தனது பழமைவாதக் கோட்பாடுகளை முழுமையாக தளர்த்தெறிந்திருக்கிறது.

வடக்குக்கும், தெற்குக்கும் ஒரே கொள்கைளை கடைபிடிக்க முடியாத மிகச் சிக்கலான சில விஷயங்களில் சிறப்பானதொரு தீர்வு, இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களை மொத்தமாக ஒற்றைப் புள்ளியில் குவித்து வைக்கும் தனது பழைய வழக்கத்தை கைவிட்டு மக்கள் மன்றங்களான, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள், இது பழைய காங்கிரஸ் அல்ல என்பதை உறுதி செய்கின்றன. நாடு முழுவதும் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையில் மக்களின் மனங்களை புரிந்து கொண்டதன் அடையாளமாக இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன.

DMK-Congress twin at Election manifesto

உண்மையான மதச்சார்பின்மை, மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தோல்வியை விட சிறந்த பாடம் இல்லை; காலத்தை விட சிறந்த ஆசிரியர் இல்லை என்ற கூற்றுக்கு ஏற்ப இந்த மாற்றங்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்தால், அக்கட்சி மேலும் பல நுற்றாண்டுகள் உயிர்ப்புடன் திகழும் என்றும் இணையதள வாசிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி எனும் பேரறிஞர் அண்ணாவின் முழக்கத்திற்கு கட்டியம் கூறும் வகையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஒரு கதாநாயகனாக தெரிவதால், திமுக - காங்கிரசின் தேர்தல் அறிக்கைகள் ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதே நிதர்சனம் !