Skip to main content

200வது நாளைத் தொடும் வேங்கைவயல் விவகாரம்; 4 சிறுவர்களை நேரில் வரச் சொன்ன நீதிபதி

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

200th Anniversary of Vengaiyal Affair; 4 Objections to DNA testing of children

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் நடந்து 199 நாட்கள் ஆகிவிட்டன. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் 179வது நாளாக விசாரித்து வருகின்றனர்.

 

இந்த சம்பவத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இருந்து நீதிமன்ற உத்தரவுப்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இதுவரை 21 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த 10 ஆம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில் வேங்கைவயல் வழக்கு விவகாரம் தொடர்பாக மேலும் இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவர் என 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி வேண்டும் எனக் கேட்கப்பட்டு வழக்கு வரும் 12ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. 12ம் தேதி (இன்று) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது சிறுவர்களின் பெற்றோர்களையும் அழைத்து வர நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அதன்படி சிறுவர்களின் பெற்றோர்கள் ஆஜராகினர். அப்பொழுது வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் பெற்றோர் தங்களுக்கு ரத்த மாதிரி கொடுக்க விருப்பமில்லை. பாதிக்கப்பட்ட எங்களையே குற்றவாளியாக்கும் முயற்சியில் மீண்டும் மீண்டும் சிபிசிஐடி போலீஸ் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் நாங்கள் ரத்த மாதிரி கொடுக்க முடியாது என அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதேபோல் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களின் பெற்றவர்களிடம் நீதிபதி ஜெயந்தி விசாரணை மேற்கொண்டார். அப்பொழுது, “உங்கள் பிள்ளைகளை கூட்டிவரச் சொன்னோம். ஏன் கூட்டிவரவில்லை” எனக் கேட்க, “பசங்க பள்ளிக்கூடம் போய்ட்டாங்க” எனக் கூறினர். “வரும் 14ம் தேதி 4 சிறுவர்களை நேரில் அழைத்து வர வேண்டும். அந்த சிறுவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டியிருக்கிறது. அதற்கு பிறகு தான் அந்த நான்கு சிறுவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்யலாமா அல்லது கூடாதா என உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்