Skip to main content

“வாய்க்காலே இல்லாத இடத்தில் எப்படி தூர்வாரினார்கள்” - விவசாயிகள் வேதனை

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

200 acres of direct sowing paddy crops have been damaged by rain

 

தொடர் மழையால் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பகுதியில் 200 ஏக்கர் நேரடி நெல் விதைப்பு பயிர்கள் அழுகியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்குட்பட்ட குமராட்சி அருகே உள்ள வாண்டையார் இருப்பு, வெள்ளூர், வெச்சூர்  உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட  கிராமப்  பகுதிகளில்  கடந்த 20 நாட்களுக்கு முன் விவசாயிகள் 500 ஏக்கருக்கு மேல் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். இதில் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளது. 

 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பெய்த தொடர் மழையாலும், வாண்டையார் இருப்பு, வெள்ளூர், வெச்சூர் பகுதியில் உள்ள ஊமையன் வாய்க்கால், நரிமோட்டு வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாலும் மேலும், அதனைத் தூர்வாராமல் புதர்மண்டிக் கிடப்பதால் மழைநீர் வடியாமல் கடந்த 3 நாட்களாக தேங்கி நிற்பதால் 200 ஏக்கருக்கு மேல் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அழுகியுள்ளது. இதில் சில விவசாயிகள் விளைநிலத்தில் தண்ணீர் விரைவில் வடிய வேண்டும் என்பதால் நீர் மோட்டார் பொருத்தி வயலில் தேங்கிய தண்ணீரை வடிய செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மழை அதிகமாக பெய்து தண்ணீர் வந்ததால் பயிர்களைக் காப்பாற்ற முடியாது எனக் கருதி வேதனையில் அப்படியே விட்டுவிட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் மற்றும் வேளாண் அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

 

இதுகுறித்து அப்பகுதியில் விவசாயம் செய்யும் கோவிந்தசாமி மற்றும் செல்வராஜ்  கூறுகையில், “இந்தப் பகுதியில் மழை பெய்து 3 மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிடும். தற்போது எப்போதும் இல்லாத அளவுக்குத் தண்ணீர் தேங்குவதற்கானக் காரணம் நரிமோட்டு வாய்க்கால் மற்றும் ஊமையன் வாய்க்கால், மேம்பாலத்து கன்னி ஆகிய வாய்க்கால்களில் தற்போது ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். வாய்க்காலைத் தூர்வாரவே இல்லை. இதனால் இந்தப் பகுதியில் தண்ணீர் வடிய மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் தான் 200 ஏக்கருக்கு மேல் நன்றாக வளர்ந்த நெற்பயிர்கள் மூழ்கி அழுகி விட்டது.

 

இந்த வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும் என்று பொதுப்பணித்துறையில் மனு அளித்தால், கடந்த 5 மாதத்திற்கு முன்பே தூர்வாரியாச்சு. அதற்கான தொகையையும் கொடுத்தாச்சு. இனிமேல் அடுத்த ஆண்டு தான் தூர்வார முடியும் என்கின்றனர். வாய்க்காலே இல்லாத இடத்தில் எப்படி தூர்வாரினார்கள்  என்று தெரியவில்லை.  இதுகுறித்து நடவடிக்கை  எடுக்க வேண்டும். தூர்வாரிய வாய்க்காலைக் காணவில்லை என இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து காவல்நிலையத்தில் புகாரளிக்க உள்ளோம். தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பகுதியானது தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான முட்டம் கிராமத்திற்கு அடுத்த கிராமம் ஆகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.