
சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த 11 இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை அதே ஊரில் இருக்கும் சில ஆதிக்க சமூகத்தினர், இருளர் மக்களை விரட்டியடித்துவிட்டு அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். இருளர் மக்கள் அன்றாட குடும்பத்தை பசி பட்டினி இல்லாமல் நடத்தமுடியாத நிலையில் வீட்டுமனைகள் இல்லாமல் அதே ஊரில் சில இடங்களில் நாடோடிகள் போல் வாழ்ந்துவந்தனர். இடத்தை மீட்க பல்வேறு முயற்சிகள் செய்தும் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள இருளர் மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் அவர்களுக்கு வழங்கிய வீட்டுமனையை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் அப்பகுதியில் உள்ள இருளர் சமூக மக்கள் அப்போது இருந்த சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் இதே கோரிக்கைக்குப் போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு மற்றும் இருளர் சமூக மக்கள் ஆக்கிரமித்துள்ள வீட்டுமனையை மீட்டுத் தர வேண்டும் என்று மனு அளித்து கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவத்தின் உண்மை தன்மையை அறிந்து சிதம்பரம் சார் ஆட்சியர் துரித நடவடிக்கை எடுத்து, கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிகப்பட்ட இருளர் சமூக மக்களின் வீட்டுமனைகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு அந்த வீட்டுமனைகளுக்குப் பட்டா வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில், திங்கள்கிழமை (26.07.2021) சம்பந்தபட்ட இருளர் சமூக மக்களுக்கு சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் கலந்துகொண்டு 11 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கினார். பட்டாவைப் பெற்றுக்கொண்ட இருளர் மக்கள், 20 ஆண்டுகால கனவு. இதற்காக பல மனுக்கள் மற்றும் போராட்டங்களை நடத்தினோம் கிடைக்கவில்லை. மனு கொடுத்த சில நாட்களில் இந்த இடத்தைப் பெற்றுத் தந்த உங்களுக்கு அனைவரின் சார்பாக கண்ணீருடன் கை கூப்பி நன்றியை தெரிவித்தனர். சிலர் பட்டாவை கையில் வாங்கியவுடன் மகிழ்ச்சி பொங்க அதே இடத்தில் கைதட்டி கூச்சலிட்டனர். பின்னர் சார் ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்கு சால்வை அனிவித்து நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் புவனகிரி வட்டாட்சியர் அன்பழகன், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு, கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த 3 மாதத்திற்கு முன் சாதி சான்றிதழ் இல்லாததால் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் சிரமம் உள்ளதாகவும், கல்வி கற்க முடியாமல் பல குழந்தைகள் வீட்டிலே உள்ளதாக மனு அளித்தனர். அதனையும் இவர் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு கொத்தட்டை சுற்றுவட்ட பகுதியில் வசித்த 100க்கும் மேற்பட்டவர்களுகு சாதி சான்றிதழ் வழங்கினார். இவரது செயல்பாடுகள் அனைத்து மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.