
வேலூர் மாவட்டம் லத்தேரி LC57 ரயில்வே கேட்டில் மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைத்து தர கோரிக்கை விடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லத்தேரி, அன்னங்குடி, திருமணி, சோழமூர், விழுந்தாங்கல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்தும் மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்காததால் லத்தேரி பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

‘சென்னையில் இருந்து காட்பாடி வழியாக பெங்களூர் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய ரயில் தடமாக LC57 ரயில்வே கேட் அமைந்துள்ளதால் ஒருமுறை ரயில்வே கேட்டை கடப்பதற்கு கடும் சிரமமாக இருக்கிறது. வேலூர்,கே.வி.குப்பத்தில் உள்ள மருத்துவமனைக்கும், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் ரயில்வே கேட் மூடியே இருப்பதால் கேட் திறப்பதற்கு மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். அதனால் மத்திய மாநில அரசுகள் ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும். அப்படி அமைக்காவிட்டால் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்’ என்று கூறி 20க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.