Skip to main content

5 ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்... மாவட்டத்திலேயே முதல் முறையாக செயல்பாட்டுக்கு வந்த திட்டம்!!

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

குடிதண்ணீர் குடம் ரூ. 10 க்கு வாங்கிக் கொண்டிருந்த கிராம மக்களுக்கு 20 லிட்டர் ரூ. 5 க்கு வழங்கும் திட்டம் பல இடையூறுகளுக்கு மத்தியில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள் ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகாவில் உள்ள கடைக்கோடி கிராமம் ஏம்பல். முழுக்க முழுக்க வானம் பார்த்த பூமி. மழைத் தண்ணீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மக்கள். மழை பொய்த்தால் விவசாயமும் பொய்த்துப் போகும். ஆனால் குழந்தைகளை படிக்கை வைத்த கிராம மக்கள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், என பல துறைகளிலும் பணியாற்றும் இளைஞர்களை உருவாக்கிவிட்டனர் கிராம மக்கள். இப்படி வளர்ந்த இளைஞர்கள் முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் இணைந்து தங்கள் கிராமத்தை உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டனர். 

 

 20 liters of purified drinking water for Rs 5...


அதற்காக பொருளாதார உதவிகளுடன் களப்பணியிலும் ஈடுபடத் தொடங்கினார்கள். அரசுப் பள்ளியில் தொடங்கி, அரசு மருத்துவமனை, நீர்நிலைகள் சீரமைப்பு, சாலைப் பணிகள் என்று அடுத்தடுத்து பல பணிகளை சிறப்பாக செய்தனர். பல வருடங்களாக மூடிக் கிடந்த வாரச் சந்தையை திறந்து சாதித்தனர். ஒவ்வொரு பணிக்கும் அரசுக்கு விண்ணப்பித்து அவற்றை பெற்றும் கிராம வளர்ச்சிக்காக கொண்டு வந்தனர்.

இப்படி ஒரு திட்டம் தான் கிராமங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்.. கடந்த நிதி ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 1500 க்கும்  கிராமங்களில் தலா ரூ. 8 லட்சம் மதிப்பில் மணிக்கு ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கும் ஆர்.ஒ. பிளாண்ட்கள் அமைக்க அறிவிப்பு வெளியானது. அதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 68 பணிகள். அதில் ஒன்று தான் ஏம்பல் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டது.

முன்னாள் மாணவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து தொய்வின்றி பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரு சில அதிகாரிகள் அதற்கும் முட்டுக்கட்டை போட அவற்றை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்துப் பணிகளையும் சிறப்பாக செய்து முடித்தனர்.

 

 20 liters of purified drinking water for Rs 5...

 

இந்த நிலையில் நேற்று சோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது ரூ. 5 போட்டால் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வரும். இந்த திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது..., முன்னாள் மாணவர்களால் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல அரசு திட்டங்களும் கொண்டுவரப்படுகிறது. அதில் ஒரு திட்டம் இந்த குடிதண்ணீர் சுத்திகரிப்பு திட்டம். குடிதண்ணீர் தொட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த பிளான்டில் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வெளிவருகிறது.

இப்ப வரைக்கு ஒரு குடம் ரூ.10 க்கு விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பருகினோம். இனி ரூ. 5 க்கு 20 லிட்டர் தண்ணீர் பிடிக்கலாம். காசை போட்டால் 20 லிட்டர் தண்ணீர் வரும். புதுக்கோட்டை மாவட்டத்திலேயே முதல் முறையாக செயல்படத் தொடங்கிவிட்டது இந்த திட்டம் என்றனர்.

இதே போல தமிழ்நாடு முழுவதும் திட்டம் செயல்படத் தொடங்கினால் மக்கள் குடிதண்ணீருக்காக செய்யும் செலவை கொஞ்சம் குறைக்கலாம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.