A 2-year-old girl was left alone on the shore of the lake

Advertisment

ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த வண்டி பாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் இன்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் துணி துவைப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது கீழ்பவானி வாய்க்கால் ஏரியில் சுமார் இரண்டு வயது பெண் குழந்தை தனியாக “அம்மா.. அம்மா...” என்று அழுது கொண்டு நின்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள், சுற்றுபுறங்களில் குழந்தையின் அம்மாவைத் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் குழந்தைக்குத் தொடர்புடைய யாரும் அங்கு இல்லாததால், சந்தேகமடைந்த பெண்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவிசாரணை மேற்கொண்டனர். காலை நேரத்தில் குழந்தையின் தாய் கொண்டுவந்து விட்டுவிட்டுச் சென்றாரா? அல்லது குழந்தையைக் கரையில் நிற்கவைத்துவிட்டு நீரில் குதித்து தற்கொலை ஏதும் செய்துகொண்டாரா என்று பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கடத்தூர் போலீசார் எந்த விவரமும் தெரியாததால் இரண்டுவயது பெண் குழந்தை போலீசாரின் பராமரிப்பிலே வைத்துள்ளனர்.