
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலரைக் கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (05.09.2021) இந்த வழக்கில் புதிதாக அமைக்கப்பட்ட தனிப்படை காவலர்கள் கோடநாடு சென்று நான்கு மணி நேரம் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கூடுதலாக இரண்டு சாட்சிகளிடம் இன்று காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். கூடலூரைச் சேர்ந்த அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை காலர்கள் விசாரணை நடத்த உள்ளனர். இதற்கிடையே இந்த விசாரணைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.