Skip to main content

வழிப்பறி ரவுடிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

2 robbers were arrested under the law of Goondas

 

சேலத்தில், வழிப்பறி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

 

சேலம், தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்த எலி பிரகாஷ் என்கிற பிரகாஷ் (25), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி சாலையைச் சேர்ந்த பெரிய சொலீசன் என்கிற சதீஸ் (26) ஆகிய இருவரும் தொடர்ந்து வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டதாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். சேலம் மணியனூரைச் சேர்ந்த அருள்மணி என்பவர் தாதகாப்பட்டி கேட் அருகே கடந்த அக். 19ம் தேதி, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பிரகாஷ், சதீஸ் ஆகிய இருவரும் அவரை வழிமறித்து கத்தி முனையில் அவர் அணிந்திருந்த அரை பவுன் தங்க மோதிரம், 2600 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். 

 

இதுகுறித்த புகாரின் பேரில், அவர்கள் இருவரையும் அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர். இவர்களில் பிரகாஷ் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் இதேபோல 2 வழிப்பறி வழக்குகளும், சதீஸ் மீது 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் பிரகாஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தற்போது மூன்றாம் முறையாக இதே சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டு உள்ளார். சதீஸ், கடந்த 2020ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் மீது இரண்டாம் முறையாக குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

 

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இவர்கள் இருவரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகரக் காவல்துறை துணை ஆணையர் லாவண்யா, மாநகரக் காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோதாவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில், அவர்கள் இருவரும் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான கைது ஆணை, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகாஷ், சதீஸ் ஆகிய இருவரிடமும் நேரில் வழங்கப்பட்டது. 

 


 

சார்ந்த செய்திகள்