2 people including a relative arrested  for old lady incident in kulathupalayam near paramathivellur

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த சித்தம்பூண்டி அருகே உள்ள குளத்துப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி சாமியாத்தாள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் மூதாட்டி மாரியாத்தாள் கொலை வழக்கில் அவரது உறவினர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நாமக்கல் காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாமக்கல் மாவட்டம், வேலூர் உட்கோட்டம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, குளத்துபாளையம் கிராமத்தில் கடந்த 08 ஆம் தேதி (08.06.2025) அதிகாலை சுமார் 01.00 மணியளவில் மூதாட்டி ஒருவர் வெட்டப்பட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் நல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதே சமயம் காயம்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி கடந்த 08ஆம் தேதி காலை சுமார் 09:00 மணியளவில் இறந்துவிட்டார்.

Advertisment

இந்த வழக்கு தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் சந்தேக நபர்களை விசாரணை செய்யப்பட்டது. இதிலிருந்தும் சம்பவம் நடைபெற்ற பகுதியின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகளைப் பகுப்பாய்வு செய்ததில் இருந்தும், 2 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆனந்தராஜ் என்பவர் முக்கிய குற்றவாளியாகவும், அவருக்கு உடந்தையாக அவருடைய நண்பர் அஜீத்குமார் என்பவர் செயல்பட்டதும் தெரியவந்தது. இந்த குற்றவாளி ஆனந்தராஜ் இறந்து போன சாமியாத்தாள் என்பவரின் தோட்டம் மற்றும் அவருடைய மகளின் எண்ணெய் மில்லில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு சுமார் 2. 5 வருடங்கள் வேலை செய்திருக்கிறார்.

அவரது வேலை மற்றும் நடவடிக்கைகள் திருப்தி இல்லாததால் அவர் வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். அதன் பிறகு அவ்வப்போது சில தடவை இறந்து போன மூதாட்டியின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்து சென்றுள்ளார். கடைசியாகக் கடந்த தீபாவளி சமயத்தில் ஒரு வாரம் வந்து தங்கியுள்ளார். அப்போதும் அவர் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் இறந்து போன மூதாட்டியின் மகள் கிருஷ்ணவேணி, ஆனந்தராஜைத் திட்டியதால் அங்கிருந்து சென்றுவிட்டார். நன்றாக வேலை செய்த போதிலும் சரியான சம்பளம் இல்லாமல் அவமானப்பட்டதால் மூதாட்டியின் குடும்பத்தின் மேல் ஆனந்தராஜுக்கு ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

2 people including a relative arrested  for old lady incident in kulathupalayam near paramathivellur

Advertisment

இத்தகைய சூழலில் தான் சம்பவத்தன்று தன்னுடைய நண்பருடன் இரவு சுமார் 12 மணியளவில் சாமியாத்தாள் தோட்டத்திற்கு வந்து அரிவாளால் மூதாட்டியை வெட்டியுள்ளார். பிறகு அங்கிருந்து இருவரும் ஆனந்தராஜுக்குச் சொந்தமான இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் எதிரிகள் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் குற்றவாளிகள் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.