2 people including real estate magnate arrested in rowdy murder case

சேலம் அருகே, ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் அயோத்தியாப்பட்டணம் மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித் என்கிற ரஞ்சித்குமார் (29). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் 4ம் தேதி அப்பகுதியில் உள்ள வேடியப்பன் கோயில் அருகே, சாக்கடை பள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். அவரை மர்ம நபர்கள் பாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

Advertisment

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அம்மாபேட்டை காவல்நிலைய காவல்துறையினர், மகி என்கிற மகேந்திரபூபதி, புகழ் என்கிற புகழேந்தி, குணா என்கிற குணசேகரன், பிரியாணி மணி என்கிற மணி, மதன் என்கிற மதன்குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுரேஷ், வழக்கறிஞர் தியாகராஜன் ஆகிய இருவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இருவரும் திருப்பூர், அவிநாசி பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின்பேரில் காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிரமாக தேடினர்.

Advertisment

இது ஒருபுறம் இருக்க, அவர்கள் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே, அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படையினர் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ஆக. 7ம் தேதி ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. அதில் ஒரு வழக்கில் இருந்து விடுதலை பெற்றுவிட்ட நிலையில், மற்றொரு வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.

சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ், தற்போது திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் வசித்து வருகிறார். இவருக்கு புகலிடம் கொடுத்ததாக அழகாபுரம் பெரிய புத்தூரைச் சேர்ந்த கூட்டாளி மகுடேஸ்வரன் (32) என்பவரையும் கைது செய்துள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட மேலும் பல குற்ற வழக்குகள் உள்ளன. கைதான இருவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தியாகராஜனை தேடி வருகின்றனர்.