ஜலகண்டாபுரம் அருகேகாதலைப் பிரித்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் கூட்டாளியுடன் சேர்ந்து காதலியின் அண்ணனை சரமாரியாக வெட்டிக் கொன்ற வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள அரியாம்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. இவருடைய மகள் திவ்யா (18). இவரும்அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மாதையன் மகன் பாஸ்கர் (27) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காதலர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டுஓட்டம் பிடித்தனர். இதையறிந்த திவ்யாவின் அண்ணன் அருண்குமார் (27), ஊர் பெரியவர்களுடன் பேசிகாதலர்களைப் பிரித்து வைத்தார்.
இதையடுத்து, காதலியைப் பிரித்து வைத்த அருண்குமாரை எப்படியாவது பழிவாங்கியே தீர வேண்டும் என்று பாஸ்கர் திட்டமிட்டார். கடந்த2020ம் ஆண்டு, நவம்பர்15ம் தேதி, நாமக்கல்லில் இருந்து அருண்குமார் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு தீபாவளி பண்டிகைக்காக சென்றுள்ளார். அங்கே தனது மோட்டார் சைக்களில் சித்தப்பா வீட்டுக்குச் சென்றுள்ளார். இதைப் பார்த்த பாஸ்கர், சம்மட்டியூரைச் சேர்ந்த தனது கூட்டாளி ஹேமநாத் என்பவரை அழைத்துக் கொண்டுஊருக்குள் வந்த அருண்குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்தகாயம் அடைந்த அருண்குமார் நிகழ்விடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து ஜலகண்டாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஸ்கர், ஹேமநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்குமேட்டூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் குழந்தைவேலு ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி சரவணன், மார்ச் 15ம் தேதி தீர்ப்பளித்தார். அதில், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் கூடுதலாக 3 ஆண்டுகள்,3 மாதங்கள்சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.