
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கடுமையான நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப்பொருள்கள் வழங்கப்படுவதை தடுக்க, தேர்தல் பறக்கும் படைகள், நிலைக்குழுக்கள் மூலம் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தனி நபர் ஒருவர், உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுத்துச்ச செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை தாதம்பட்டி பிரிவு சாலையில், வேளாண்மைத்துறை அலுவலர் ஜெகதீசன் தலைமையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் திங்கள்கிழமை (மார்ச் 29) காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அம்மாபேட்டை ரவுண்டானா பகுதியில் இருந்து டி.பெருமாபாளையம் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை தடுத்து தணிக்கை செய்தனர். அந்த வண்டியின் இருக்கைக்கு கீழ் உள்ள பெட்டியில் 2 லட்சம் ரூபாய் உரிய ஆவணங்களின்றி இருப்பது தெரிய வந்தது. அத்தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகனத்தை ஓட்டி வந்தவர், டி.பெருமாபாளையத்தைச் சேர்ந்த ராமு என்பது தெரிய வந்தது. அவருடைய வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Follow Us