Skip to main content

பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ 450 கிராம் கஞ்சா; திருச்சியில் பரபரப்பு

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

2 kg 450 grams of cannabies seized; The excitement in Trichy

 

திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 8 வழக்குகளில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியபிரியா, திருச்சி மாநகர முதல் பெண் காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் செய்யும் குற்றவாளிகள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

 

கடந்த 22 ஆம் தேதி ராம்ஜி நகர் மில் காலனி, மாரியம்மன் கோவில் பின்புறம் இளைய சமூகத்தை சீரழிக்கும் சுமார் 2 கிலோ 450 கிராம் கஞ்சாவை கைப்பையில் வைத்து விற்பனை செய்த ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவரின் மகனான ஜெய் (எ) ஜானகிராமன் என்பவரை பிடித்து விசாரணை செய்து அவரிடமிருந்த கஞ்சாவை கைப்பற்றி உடனடியாக அவரை கைது செய்து எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விசாரணையில் ஜெய் (எ) ஜானகிராமன் மீது திருச்சி மாநகரத்தில் சட்டத்திற்கு புறம்பாக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்ததாக 4 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 வழக்குகள் உட்பட மொத்தம் 10 வழக்குகள் திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

 

எனவே, ஜெய் (எ) ஜானகிராமன் தொடர்ந்து இளைய சமூகத்தை சீரழிக்கும் கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்யும் எண்ணம் உடையவர் என விசாரணையில் தெரிய வருவதால், ஜானகிராமனின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எடமலைப்பட்டிபுதூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா ஜானகிராமனை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ஜானகிராமனிடம் குண்டர் தடுப்பு சட்ட கைது ஆணை வழங்கப்பட்டது.

 

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்