2 judge bench to give final verdict in Senthil Balaji case Justice C.V. Karthikeyan

Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகசென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

அதேநேரம் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இரு தரப்பின் இறுதி விசாரணையும் முடிவடைந்த நிலையில், நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வழக்கு குறித்து தனது கருத்தை தெரிவிக்கையில், “செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான். அவர் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நிரூபிக்கட்டும். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று இரண்டு நீதிபதி அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும். எனவே செந்தில் பாலாஜி வழக்கின் இறுதித்தீர்ப்பை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கும்” என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisment

இதையடுத்து இந்த வழக்கை மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது. மேலும் இரு நீதிபதிகள் தீர்ப்பில் முரண்பட்டதால் இந்த வழக்கில் தனது கருத்தை 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலாக்கு அனுப்பினார். அதனைத்தொடர்ந்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின்பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.