திருச்சி வந்த 2 அலங்கார ஊர்திகள்!

2 decorative vehicles at Trichy!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு பங்கேற்ற இரண்டு அலங்கார ஊர்திகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்த இன்று வரப்பெற்றதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அலங்கார ஊர்திகளை வரவேற்றுப் பார்வையிட்டார்.

இந்த இரண்டு அலங்கார ஊர்திகள் ஒன்றில் மகாகவி பாரதியார், செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார், தியாகி சுப்பிரமணிய சிவா, தியாகி சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகிய தலைவர்களின் திருவுருவச்சிலைகளும், மற்றொரு அலங்கார ஊர்தியில் தந்தை பெரியார், மூதறிஞர் இராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கர்மவீரர் காமராஜர், சமூக சீர்திருத்தச் செயற்பாட்டாளர் ரெட்டமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர் குமரன், தியாகி வ.வே.சு.அய்யர், கண்ணியமிகு காயிதே மில்லத், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதாரப் பேராசிரியராகவும், சிறைத்தண்டனை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாகசீலர் கக்கன் ஆகிய தலைவர்களின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

இந்த இரண்டு அலங்கார ஊர்திகளும் இன்று 07.02.2022 திங்கட்கிழமை மற்றும் 08.02.2022 செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் பழனிகுமார், மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான், மாவட்ட நகரப்பொறியாளர் அமுதவள்ளி மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe