
ஈரோடு அருகே ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தாமோதரன்(23). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சவாரி ஒன்றிக்காக பெருந்துறை மடத்துப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் நின்ற 2 பேர் ஆட்டோவை கை காட்டி நிறுத்தி உள்ளனர்.
பின்னர் வாடகைப் பற்றி பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த 2 நபர்களும் திடீரென்று ஆட்டோவில் தாமோதரன் வைத்திருந்த 2 செல்போன்களைத் திருடிக்கொண்டு தப்பியோடினர். இதையடுத்து தாமோதரன் சத்தம் போடவே அருகிலிருந்த பொதுமக்களின் உதவியோடு தப்பியோடிய இருவரையும் மடக்கிப் பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் பிடிபட்டவர்கள் சித்தோடு சாணார்பாளையம் மாணிக்கம் மகன் சபரீஷ்(25), திருப்பூர் லட்சுமி நகரைச் சேர்ந்த சம்பத்குமார்(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த பெருந்துறை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.