ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது...!

2 arrested for ration rice case

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது சாத்தனூர் கிராமம். இந்த கிராமத்திலிருந்து நியாயவிலைக்கடை அரிசி மூட்டைகளைக் கர்நாடக மாநிலத்திற்கு அவ்வப்போது வாகனங்களில் விற்பனைக்காகக் கடத்திச் செல்வதாக விழுப்புரம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு இரகசியமான முறையில் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த சோதனையின்போது சாத்தனூர் கிராமத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையிலிருந்து நியாயவிலைக்கடை அரிசி மூட்டைகளை ஏழு நபர்கள் ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்ததைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்ய முயன்றுள்ளனர். அதற்குள் அவர்களில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். இருவர் மட்டும் போலீஸாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விழுப்புரம் கமலா நகரைச் சேர்ந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலர் இப்ராஹிம் சுகர்னா என்பவரும் திண்டிவனம் பகுதியில் உள்ள பிரம்மதேசம் சரவணன் ஆகிய இருவரும் சேர்ந்து உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் நியாயவிலைக்கடை கடைகள் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து குறைந்த விலைக்கு நியாயவிலைக்கடை அரிசியை வாங்கி அதைப் பதுக்கி வைத்து கர்நாடக மாநிலத்திற்கு ரகசியமாகக் கடத்திச்சென்று விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 50 கிலோ கொண்ட 350 அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். பறிமுதல் செய்த லாரி மற்றும் அரிசியின் மொத்த மதிப்பு சுமார் 11 லட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தப்பியோடிய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

arrest rice
இதையும் படியுங்கள்
Subscribe