2 arrested for posting private pictures of student on social network

Advertisment

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு கடந்த ஆண்டு திண்டுக்கல்லில் கல்லூரியில் படிக்கும்போது திண்டுக்கல் ரெட்டை மலை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்துவந்த நிலையில், காதல் மயக்கத்தில் அந்தக் கல்லூரி மாணவி தனது அந்தரங்க புகைப்படங்களை தனது காதலன் சதீஷ்க்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக காதலர்கள் பிரிந்துள்ளனர். இடைப்பட்ட நேரத்தில் அந்தக் கல்லூரி மாணவிக்குத் தூத்துக்குடியைச் சேர்ந்த அருண் என்பவருடன் கிடைத்த முகநூல் நட்பு காதலாக மாறியுள்ளது. இந்தக் காதல் விஷயம் முன்னாள் காதலனான சதீஷ்க்கு தெரியவர ஆத்திரமடைந்த அவர், தூத்துக்குடி அருணுக்கு அந்தக் கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிவைத்துள்ளார். இருவரிடமும் இருந்த புகைப்படங்கள் இருவரின் நண்பர்களான மைக்கேல்பாளையம் நெல்சன், தூத்துக்குடி விஷ்வா ஆகியோருக்கும் சென்றுள்ளது. கைமாறிய படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தனது அந்தரங்க படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டதை அறிந்த அந்தக் கல்லூரி மாணவி மற்றும் அவரது பெற்றோர்கள் துடித்துப் போயினர்.

இது தொடர்பாக அந்தக் கல்லூரி மாணவி, நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட மகளிர் காவல் நிலைய போலீசார், கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த திண்டுக்கல் சதீஷ், மைக்கேல் பாளையம் நெல்சன், தூத்துக்குடி அருண், விஷ்வா ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய சதீஷ், நெல்சன் ஆகியோரை கைது செய்த போலீசார், திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளான தூத்துக்குடியைச் சேர்ந்த அருண், விஸ்வா, ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.