Advertisment

சுயநலனுக்காக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் தமிழகத்திற்கு ரூ.1950 கோடி இழப்பு: ராமதாஸ் கண்டனம்!

ramadoss

Advertisment

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படாததால் நடப்பாண்டில் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய நிதியில் ரூ.1950 கோடி முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியைக் கூட, செயலற்ற தன்மையால், பினாமி அரசு இழந்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18ஆம் ஆண்டில் ரூ.3,340 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு பதினான்காவது நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஜனவரி மாதம் வரை தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1390 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.1950 கோடியை உடனடியாக வழங்கும்படி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த போதிலும், அதை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது தான் இதற்குக் காரணம் என தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு இப்போது எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடியில் ரூ.1950 கோடி என்பது மிகப்பெரிய தொகை ஆகும். ஆனால், அலட்சியம் காரணமாக இந்தத் தொகையை தமிழக அரசு இழந்திருக்கிறது. இது தெரியாமல் நடந்த தவறு இல்லை. இப்படி ஒரு நிலை ஏற்படும் என்பது தெரிந்தும் சுயநலனுக்காக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழகத்திற்கு இவ்வளவு பெரிய இழப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தொகுதி மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்ததுடன் 2016ஆம் ஆண்டு திசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த ஆணையிட்டது. ஆனால், ஆளுங்கட்சி வெற்றி பெற சாதகமான சூழல் இல்லாததால் இன்று வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

Advertisment

உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாவிட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்பது மாநில அரசுக்கு தெளிவாகத் தெரிந்திருக்கும். ஆனாலும், தேர்தலை நடத்த பினாமி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தொகுதி மறுவரையறை செய்து முடித்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொண்டு, ஏற்கனவே உள்ள தொகுதிகளின் அடிப்படையில் தேர்தலை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் சலுகை அளித்தும் தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த பினாமி அரசு முன்வரவில்லை. பினாமி அரசு செய்த குற்றத்திற்கான தண்டனையை உள்ளாட்சி அமைப்புகள், அதன் பணியாளர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர்.

ஆட்சியாளர்கள் செய்த தவறுக்கு உள்ளாட்சி அமைப்புகளையும், மக்களையும் தண்டிப்பது முறையல்ல. எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான ரூ.1950 கோடி நிதியையும் மத்திய அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநில அரசும் அதன் பங்குக்கு அடுத்த 3 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதாக மத்திய அரசுக்கு உத்தரவாதம் அளித்து நிதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ramadas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe