Skip to main content

தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி 19 வயது பெண் உயிரிழப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
A 19-year-old girl Lose after being trapped under the wheel of a private bus

ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் இன்று வேலூரில் இருந்து பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அரப்பாக்கம் நோக்கி தனது இரண்டு மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேலூர் அடுத்த பெருமுகை பகுதியில் பாலம் கட்டுமான பணி நடந்துவருகிறது. அப்பகுதியைக் கடக்கும் போது பின்னால் வந்த தனியார் பேருந்து லேசாக வெங்கடேஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்ததில் வெங்கடேசனின் இரண்டாவது மகள் சுவேதா (19) மீது தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

தங்கள் கண் முன்னே ஒரு மகள் பேருந்து சக்கரத்தில் நசுங்கி இறந்துயிருப்பதை பார்த்து வெங்கடேசனும், மற்றொரு மகளும் கதறி அழுதனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலை என்பது மிக முக்கியமானது. 24 மணி நேரமும் போக்குவரத்து இருந்துக்கொண்டே இருக்கும். ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையை கடக்கும். அப்படிப்பட்ட சாலையில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் நடைபெறும் பாலம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடப்பதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகின்றன.

விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. பின்னர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர். பாலத்தின் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகவும் இதனால் அவ்வப்போது இதுபோன்ற தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்