19 year old boy settles with plan man passes away

நாமக்கல் அருகே, தனது தாயுடன் தவறான தொடர்பில் இருந்ததால், ஆத்திரம் அடைந்த 19 வயது சிறுவன், திமுக பிரமுகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள உத்திரகிடிகாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் பெருமாள் (35). இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். திமுக பிரமுகரான இவர், உத்திரிகிடிகாவல் ஊராட்சி மன்ற 7வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

Advertisment

அப்பகுதியில், டேங்க் மற்றும் அரசு கேபிள் ஆபரேட்டராக வேலை செய்துவந்தார். புதன்கிழமை (மார்ச் 24) இரவு 9 மணியளவில், வேலை முடிந்ததும் வீட்டுக்குத் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரசாந்த் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பெருமாள்தான் வண்டியை ஓட்டிச்சென்றார். அப்போது வெட்டுக்காடு பேருந்து நிறுத்தம் அருகே சாலையின் நடுவில் குறுக்கிட்ட மர்ம நபர் ஒருவர், அவருடைய வண்டியை வழிமறித்தார். அந்த மர்ம நபர் அடையாளம் தெரியாமல் இருக்க, முகத்தில் துண்டு கட்டியிருந்தார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரசாந்த், வண்டியில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

Advertisment

கழுத்து, தலை, மார்பு ஆகிய இடங்களில் பலத்த வெட்டு விழுந்ததில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். சத்தம் கேட்டு கிராம மக்கள் சிலர் வருவதை அறிந்ததும் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பேளுக்குறிச்சி காவல் ஆய்வாளர் வேலுதேவன் மற்றும்காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் கொலையின் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சேந்தமங்கலம் அருகே உள்ள மலைவேப்பன்குட்டையைச் சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி சசி (38). இவர்களுக்கு 19, 16, 14 வயதுகளில் மூன்று மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கர், தனது மனைவி, மகன்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் மகன்களுடன்சசி மட்டும் வசித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில்தான், கொலையுண்ட பெருமாளுக்கும் சசிக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துவந்துள்ளனர். இதையறிந்த சசியின் மூத்த மகன், தாயைக் கண்டித்துள்ளார். இனிமேல் பெருமாளை சந்திக்கக் கூடாது என்றும், ஊரார் தன்னையும், குடும்பத்தையும் தவறாகப் பேசுவதாகவும், அவரை வீட்டில் சேர்க்கக் கூடாது என்றும் திட்டியுள்ளார். ஆனாலும் சசி அதைப் பொருட்படுத்தவில்லை.

பெருமாளையும் எச்சரித்துள்ளார். அவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சசியின் மூத்த மகன், பெருமாளை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். அதையடுத்தே, சம்பவத்தன்று இரவு பெருமாளை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மலைவேப்பன்குட்டையில் பதுங்கியிருந்த சசியின் 19 வயது மகனை காவல்துறையினர் கைதுசெய்து,அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகின்றனர். இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.