Skip to main content

19 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம்; என்.எல்.சி.யில் பரபரப்பு! 

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

19 NLC Workers have health issue after ate canteen food

 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் இன்று காலை 6 மணி ஷிப்டிற்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். வேலைக்குச் சென்றவர்கள் இரண்டாவது சுரங்கத்தில் உள்ள பழைய கேண்டீனில் காலை உணவு சாப்பிட்டுள்ளனர். காலை உணவாக கேண்டீன் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு தயிர் சாதமும் வடையும் கொடுத்துள்ளது. அப்போது தொழிலாளர்கள் சாப்பிட்ட தயிர் சாதத்தில் எலி செத்துக் கிடந்ததைக் கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் கேண்டீன் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அதற்குள் ஏற்கனவே டிபன் சாப்பிட்டு முடித்த தொழிலாளர்கள் 19 பேருக்கு  வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டு கேண்டீன் முன்பு மயங்கி கீழே விழுந்தனர். இதனைப் பார்த்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு என்.எல்.சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

இச்சம்பவத்தில் இன்கோசர்வ் தொழிலாளர்கள் 10 பேர், சூப்பர்வைசர்கள் 2 பேர், ஒப்பந்த தொழிலாளர்கள் 7 பேர் என 19 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் என்.எல்.சி நிர்வாகம், தொழிலாளர்களுக்குத் தரமான உணவுகள் வழங்குவதில்லை. இனிவரும் காலங்களில் தரமான உணவுகள் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி; எதிர்பாராத விதமாக நடந்த சோகம்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Airborne tragedy in gaza by america

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது. 

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த போர் குறித்து ஐ.நா கூறுகையில், ‘இஸ்ரேல் - காசா இடையே நடைபெறும் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகள் நடப்பது கொடுமையாக இருக்கிறது. காசா பகுதியில் 4இல் ஒருவர் பசியால் வாடுகிறார்கள்’ என்று கூறி கவலை தெரிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காசா மக்களுக்கு வான்வழி உணவு மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. 

Airborne tragedy in gaza by america

அந்த வகையில், நேற்று (09-03-24) காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாதி என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு பாராசூட் மூலம் உணவுப் பொருட்களை அமெரிக்கா விநியோகம் செய்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாராசூட் விரியாமல் திடீரென பழுதானது. இதனால் அந்த பாராசூட், உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து காசா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து, காசா செய்தித் தொடர்புத்துறை கூறுகையில், ‘இந்த திட்டத்தை பற்றி முன்கூட்டியே எச்சரித்தும் அமெரிக்க அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் எங்கள் மக்களை மேலும் கொல்லாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

ரூ. 2000 கோடிக்கு என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அரசு ஆலோசனை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Central government advises to sell shares of NLC company for Rs.2000 crore

இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தினுடைய 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு இதேபோல் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அன்றைய ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. பிறகு தனியாருக்கு விற்கப்படுவதாக இருந்த 5 சதவீத என்.எல்.சி பங்குகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வாங்குவதாக முடிவெடுத்தது. 

இந்த நிலையில், தற்போது மீண்டும் என்.எல்.சியின் 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2013ல் என்.எல்.சியின் ஒரு பங்கின் விலை ரூ.75 ஆக இருந்தது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 200க்கும் மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, 7 சதவீதம் பங்குகள் என்பது ரூ. 2000 கோடிக்கும் மேலாக வரும் எனச் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை சூழ்நிலையில், 2000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க இயலுமா என்ற கேள்வி எழுவதாகச் சொல்லப்படுகிறது. என்.எல்.சி. இந்தியா லிமிடெட் அரசு நிறுவனத்திற்காகத் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நிவாரணமும், பணியும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் போராடும் நிலையில், மத்திய பாஜக அரசு தற்போது என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பிரச்சனையைத் தீவிரப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.