
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிக்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில் கப்பலப்பட்டி கிராமம், அம்பிளிக்கை ஊராட்சியில் அம்பிளிக்கை கிராமம், காவேரியம்மா பட்டி ஊராட்சியில் காவேரியம்மாபட்டி கிராமம் ஆகிய இடங்களில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகளுக்கு திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மொத்தம் 238 பயனாளிகளுக்கு தலா ரூ.1.00 லட்சம் வீதம் ரூ.2.38 கோடி மதிப்பீட்டிலான கடன் அனுமதிக்கான ஆணைகளையும் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். முதல்வராக பொறுப்பேற்றவுடன் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த குழுவினர்களுக்கு 5 பவுனுக்கு கீழ் நகைக் கடன் தள்ளுபடி மற்றும் கூட்டுறவு வங்கியில் பெண்கள் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டன. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனுதவி ரூ.60.00 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
முதலமைச்சர், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் தற்போது வரை சுமார் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் இதுவரை 18.00 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 44 மாதங்களில் 2,600 நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாய விலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 86 புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டதில், இதுவரை 1.70 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரத்தில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் குளிர்பான கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ் நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து ஊராட்சிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்த வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் 2 கல்லூரிகள் மற்றும் விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. அதில் அம்பிளிக்கையில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் கல்லூரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25. கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் தொழிற் பயிற்சி நிலையம் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போல் ஒட்டன்சத்திரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2, தொகுதி 4 ஆகிய தேர்வுகளில் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று கூறினார்.