18 flying forces in Kumari  for elections

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் அரசியல் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் விதமாக வாகனங்களில் அதிகளவு பணம் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கபட்டுள்ளது.

Advertisment

ஒரு நபர், 50 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்லலாம். அதற்கு மேல் பணம் கொண்டுசெல்ல வேண்டுமென்றால், தேர்தல் அதிகாரிகளிடம் உரிய விளக்கத்தைக் கூறி அனுமதி பெற்றுதான் கொண்டு செல்ல வேண்டும். அதிகமான பரிசு பொருட்கள், அரசியல் கட்சிகளின் சின்னங்களைக் கொண்ட பாத்திரங்களும், பரிசுப் பொருட்களும் கொண்டு செல்வதற்கும் அனுமதியில்லை. இதையெல்லாம் கண்காணிக்கும் விதமாக குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள் வீதம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பறக்கும் படையிலும்வருவாய்த்துறை அலுவலர், போலீசார், வீடியோ பதிவாளர் என 4 பேர் இருப்பார்கள்.

Advertisment

இந்தப் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கூறும்போது, “பறக்கும் படையினர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர்களுக்குத் தேர்தல் கமிஷனின் அறிவுரைப்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், எந்தவித பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைக்கக் கூடாது. தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகாரை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்” என்றார்.