ADVERTISEMENT

17 ஆண்டுகளுக்கு பின் நிரபராதி என அறிவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதி!

11:04 AM Aug 27, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்தவர் சகுந்தலா(49). இவர் தனது ஒன்றரை வயது குழந்தையை கடந்த 2002 ஆம் ஆண்டு கிணற்றில் வீதி கொன்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட நீதிமன்றம் அவருக்கு கடந்த 2004ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் அவர் திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

கடந்த 2014ஆம் ஆண்டில் அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது விவகாரம் குறித்த தகவல் அறிந்த வழக்கறிஞர் தாமஸ் பிராங்க்ளின் சீசர், சகுந்தலாவின் மேல்முறையீட்டு மனு மீதான உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சகுந்தலாவுக்கு ஜாமீன் அளித்து அவர் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி மதுரை நீதிமன்றத்தில் சகுந்தலாவுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர் சார்பில் வழக்கறிஞர் தாமஸ் பிராங்க்ளின் சீசர் ஆஜராகி, “சகுந்தலா தனது ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததற்கான ஆதாரம் இல்லை. சாட்சிகளின் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இந்த வழக்கில் இருந்து முற்றிலும் வித்தியாசமான தகவலை அளிக்கிறது. எனவே சகுந்தலா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை அவர் மீதான தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு, ‘சகுந்தலா மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விஷயத்தில் சின்னசின்ன விஷயங்களை கூட சரியாக விசாரிக்கவில்லை. சாட்சிகள் கூறிய தகவல்கள் அடிப்படையில் மனுதாரருக்கு தண்டனையை கீழ்கோர்ட் அளித்துள்ளது. எனவே சகுந்தலாவுக்கு அளித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவரிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு இருந்தால் திரும்ப ஒப்படைக்க வேண்டும்’என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இவ்வாறு தீர்ப்பு அளித்ததன் மூலம் 17 ஆண்டுகளாக குற்றவாளியாக கருதப்பட்ட சகுந்தலா நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT