
தர்மபுரியில் 23 வயது இளம்பெண்ணை கழுத்தை நெரித்து 17 வயது சிறுவன் கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி பழைய ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா(23). மருத்துவப் பிரிவில் பட்டம் பெற்று இவர் ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஹர்ஷா கடந்த 5 ஆம் தேதி நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் கழுத்தில் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
ஹர்ஷாவின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்பை பரிசோதனை செய்ததில் அவர் கடைசியாக காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனிடம் போன் பேசியுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவனிடம் நடைபெற்ற விசாரணையில், ஹர்ஷாவை தான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில், “நானும் ஹர்ஷாவின் தம்பியும் நெருங்கிய நண்பர்கள். அவரின் வீட்டிற்குச் சென்ற பொழுது ஹர்ஷாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமானது. இந்த நிலையில் ஹர்ஷா ஓசூருக்கு வேலைக்குச் சென்ற இடத்தில் வேறு ஒருவரைக் காதலிப்பதாக என்னிடம் கூறினார். ஆனால் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததால் ஹர்ஷாவிடம் சண்டைபோட்டேன்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஹர்ஷாவிடம் பேச வேண்டும் என்று நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதிக்கு அழைத்தேன். அப்போது அங்கு வந்த ஹர்ஷாவிடம் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மிரட்டினேன். ஆனால் அதற்கு அவர் ஒத்துக்கொள்ளாததால் ஹர்ஷாவின் துப்பட்டாவை வைத்து அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.” என்று சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.