A 17-year-old boy was chased and lost his life

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது மகன் தனுஷ் (17). இவர் நேற்று (14-11-23) மதியம் தனது வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் தனுஷை வீட்டை விட்டுவெளியே வருமாறு அழைத்துள்ளனர். வெளியே வந்த தனுஷிடம், அந்த 2 வாலிபர்கள் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த அந்த 2 வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனுஷின் தலையில் வெட்டினர். அவர்களிடமிருந்து தனுஷ் தப்பி ஓடினார். ஆனாலும், தனுஷை ஓட ஓட விரட்டி அவரை சரமாரியாக வெட்டினர்.

தனுஷின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்ததை கண்ட அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். மேலும், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, இது குறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய 2 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இது குறித்த விசாரணையில், கொலையான தனுஷ் சென்னையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்பட்டது. இதில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடு திரும்பிய தனுஷும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் மற்றும் தனசேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது தனுஷுக்கும், அந்த இரண்டு பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதையடுத்து, மறுநாளான நேற்று முன் தினம் (13-11-23) தனசேகரின் வேன் கண்ணாடியை தனுஷ் அடித்து உடைத்து விட்டதாகவும், இதில் ஏற்பட்ட பிரச்சனையால் தனுஷை, தனசேகரும் வினோத்தும் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக வினோத் மற்றும் தனசேகரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர்களின் செல்போன் மூலம் நேற்று (14-11-23) மாலை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் 17 வயது சிறுவனை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.