
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் தனி நபர்களிடம் இருந்த 1682 துப்பாக்கிகள் இதுவரை காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
சட்டமன்றம், மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களின்போது தனி நபர்கள் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் துப்பாக்கிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையங்களில் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். தேர்தல் நடைமுறைகள் முடிந்த பிறகு உரியவர்களிடம் துப்பாக்கிகள் திரும்பவும் ஒப்படைக்கப்படும்.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தனி நபர்கள் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளைக் காவல்நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. சேலம் மாவட்டத்தில் 1377 துப்பாக்கிகளும், மாநகரப் பகுதியில் 551 துப்பாக்கிகளும் உள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து தற்போது வரை சேலம் மாவட்டம் மற்றும் மாநகர காவல்நிலையங்களில் மொத்தம் 1682 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்ட பகுதியில் 95 துப்பாக்கிகளும், மாநகர பகுதியில் 151 துப்பாக்கிகளும் என மொத்தம் 246 துப்பாக்கிகள் இன்னும் ஒப்படைக்கப்படாமல் உள்ளன. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ''சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் தனி நபர்களிடம் மொத்தம் 1928 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளன. தேர்தல் காலங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இவ்வாறு தனி நபர்களிடம் இருக்கும் துப்பாக்கிகள் பெறப்பட்டு வருகிறது,'' என்றனர்.