
அரூரில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16.50 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் குமார் (40). அதிமுக பிரமுகர். அவருடைய வீட்டில் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காக கத்தை கத்தையாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) அதிகாலையில் குமார் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அதிகாரிகளைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த குமார், தான் கையில் வைத்திருந்த ஒரு பையை வீட்டுக்குப் பின்பக்கமாக தூக்கி எறிந்தார்.
அங்கு தயாராக இருந்த மற்றொரு நபர் அந்தப் பையை, எடுக்க முயன்றபோது காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்தனர். இந்தக் களேபரத்திற்கு இடையே குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதிகாரிகள் விசாரணையில், காவல்துறையினரிடம் பிடிபட்ட நபர், அப்பகுதியைச் சேர்ந்த நேதாஜி (39) என்பதும், அதிமுக பிரமுகர் என்பதும், அரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டுப்போட வைப்பதற்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அந்தப் பையில் பணத்தைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பையில் 16.50 லட்சம் ரூபாய் இருந்தது. அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு அதிமுக பிரமுகரான மருத்துவர் சரவணன் என்பவர் உடந்தையாக இருந்திருப்பதும் தெரிய வந்தது. மருத்துவர் சரவணன் மற்றும் குமார் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோட்டாட்சியர் முத்தையன், வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.