Skip to main content

தேர்தல் அமைதியாக நடக்க... ஈரோட்டில் 160 பேர் அதிரடி கைது! 

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

160 people arrested in Erode

 

தமிழகம் முழுக்க மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சித் தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களே பாக்கியுள்ள நிலையில், அந்தந்த வார்டுகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் பிரச்சாரம், ஆட்டம், பாட்டம் என தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய நான்கு நகராட்சிகள், 42 பேரூராட்சிகளிலும் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 22ஆம் தேதி வாக்குகள் என்னும் பணி நடைபெற இருக்கிறது. இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவுக்காக 401 இடங்களில் 1,221 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மாவட்டம் முழுவதும் 184 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

 

பொதுமக்கள் தேர்தல் நாளில் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலமும் நடத்தி வருகின்றனர். தேர்தல் நாளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில், தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள பழைய குற்றவாளிகள் பட்டியலை போலீசார் தயார் செய்து வைத்திருந்தனர். கடந்த சில நாட்களாக அவர்களது நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்து வந்தனர். 

 

இந்த பழைய குற்றவாளிகளை வைத்து ஒரு சில கும்பல் வன்முறையை ஏவி விடலாம் என்பதை அறிந்த ஈரோடு போலீசார், மாவட்டம் முழுவதும் 483 பழைய குற்றவாளிகளை அடையாளம் காண்டனர். அதில் தற்போது 40 பேர் சிறையில் உள்ளனர். மேலும், தேர்தல் அமைதியான முறையில் நடக்கும் வகையில் 160 பழைய குற்றவாளிகளை மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பிடித்து அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஆர்.டி.ஓ முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 283 பழைய குற்றவாளிகளின் நடவடிக்கையை போலீசார் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதில் நன்னடத்தையை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்