
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் நேற்று (24.02.2.2025) அருகில் உள்ள அங்கன்வாடிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 16 வயது சிறுவன் ஒருவன், குழந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் குழந்தையை அருகில் உள்ள புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் குழந்தை கதறி அழுதுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சிறுவன், குழந்தையின் தலை மற்றும் முகத்தில் கல்லால் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதில் குழந்தையின் கண் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு படுகாயம் அடைந்தது. அதன் பின்னர் சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதற்கிடையே குழந்தை வெகுநேரமாக வீடு திரும்பாததால் குழந்தையின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் குழந்தையைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது அங்கன்வாடிக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத புதர் பகுதியில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது.
அதன்படி அங்குச் சென்று பார்த்த போது சிறுமியின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் குழந்தைக்குச் சீர்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் போக்சோ உள்ளிட்ட வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து சிறுவனைக் கைது செய்து இன்று (25.02.2025) ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 3 வயதுக் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.